Arca da aliança
A Arca da Aliança era o símbolo mais sagrado de Israel — representava a presença de Deus no meio do seu povo. Sobre ela brilhava a glória do Senhor entre os querubins.
"சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும். அதை எங்கும் சுத்தப்பொன் தகட்டால் மூடு; நீ அதனுடைய உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதனால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் விளிம்பு உண்டாக்கி, அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து, சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சு. அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை அந்தப் பெட்டியிலே வைக்கவேண்டும். "சுத்தப்பொன்னினாலே கிருபாசனத்தைச் செய்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கட்டும். பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும். ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும். அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாக இருக்கட்டும்; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாக இருப்பதாக. கிருபாசனத்தைப் பெட்டியின்மீது வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை வைப்பாயாக.
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன்.
பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டாக்கினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
யெகோவா மோசேயை நோக்கி: "நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய். அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து, பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
மோசே தேவனோடு பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது, தன்னோடே பேசுகிறவர்களின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து உண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடு பேசுவார்.
அவர்கள் யெகோவாவுடைய மலையைவிட்டு, மூன்றுநாட்கள் பயணமாக போனார்கள்; மூன்றுநாட்கள் பயணத்திலும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன்பு சென்றது. அவர்கள் முகாமிலிருந்து பயணமாக போகிறபோது, யெகோவாவுடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது. உடன்படிக்கைப் பெட்டியானது புறப்படும்போது, மோசே: "யெகோவாவே, எழுந்தருளும், உம்முடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக" என்பான். அது தங்கும்போது: "யெகோவாவே, அநேக ஆயிரம்பேர்களாகிய இஸ்ரவேலர்களிடத்தில் திரும்புவீராக" என்று சொல்லுவான்.
பின்பு யெகோவா மோசேயை நோக்கி: "நீ இஸ்ரவேல் மக்களோடு பேசி, அவர்களுடைய பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பெயரை எழுது. லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பெயரை எழுதவேண்டும்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும். அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் இடமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும். அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் மக்கள் உங்களுக்கு விரோதமாக முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியச்செய்வேன்" என்றார். இதை மோசே இஸ்ரவேல் மக்களோடு சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லோரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது. அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே யெகோவாவுடைய சமுகத்தில் வைத்தான். மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்திற்குள் நுழைந்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. அப்பொழுது மோசே யெகோவாவுடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: "ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரர்களுக்கு விரோதமான அடையாளமாவதற்காக, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டு போய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாக முறுமுறுப்பதை ஒழியச்செய்வாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள்" என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள். எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.
அப்பொழுது யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நதியின் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்திற்குத் திரும்பி, முன்புபோல அதின் கரையெங்கும் புரண்டோடியது.
எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. யெகோவா யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். யுத்தமனிதர்களாகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாட்கள் சுற்றிவரவேண்டும். ஏழு ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவாருங்கள்; ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நீண்ட சப்தம் எழுப்பும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், மக்கள் எல்லோரும் மகா சத்தத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும்; அப்பொழுது பட்டணத்தின் மதில் இடிந்துவிழும்; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராக ஏறிப்போகவேண்டும் என்றார். அந்தப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி; மக்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்த வீரர்கள் யெகோவாவின் பெட்டிக்குமுன்னே நடக்கவேண்டும் என்றான்.
எக்காளங்களை ஊதும்போது, மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை மக்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடு சத்தமிடும்போது, மதில் இடிந்து விழுந்தது; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,
பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்; அவர்கள் படையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நான்காயிரம்பேர் வெட்டப்பட்டு இறந்தார்கள். மக்கள் திரும்ப முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று யெகோவா பெலிஸ்தர்களுக்கு முன்பாக நம்மை முறியடித்ததென்ன? சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய எதிரியின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவில் வரவேண்டும் என்றார்கள். அப்படியே கேருபீன்களின் மத்தியில் இருக்கிற சேனைகளின் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, மக்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் இருந்தார்கள். யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமிலே வருகிறபோது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பூமி அதிரத்தக்கதாக அதிக சத்தமாக ஆர்ப்பரித்தார்கள். அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர்கள் கேட்டபோது: எபிரெயர்களுடைய முகாமில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு யெகோவாவின் பெட்டி முகாமில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள். தேவன் முகாமில் வந்தார் என்று சொல்லப்பட்டதினால், பெலிஸ்தர்கள் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே. பெலிஸ்தர்களே, திடன் கொண்டு ஆண்களைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்ததுபோல நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடி ஆண்களாக இருந்து யுத்தம்செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது பெலிஸ்தர்கள் யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் விழுந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய அழிவு உண்டானது; இஸ்ரவேலிலே 30,000 காலாட்படையினர் மடிந்தார்கள். தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் இறந்தார்கள்.
அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி யெகோவாவுடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். இப்படி நடந்ததை அஸ்தோத்தின் மக்கள் பார்த்தபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாக இருந்ததால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்ககூடாது என்று சொல்லி; பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் அழைத்து, தங்களின் அருகிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணம்வரை எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள். அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, யெகோவாவுடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் கடுங்கோபமாக இறங்கினது; அந்தப் பட்டணத்தின் மனிதருக்குள் சிறியவர் துவங்கிப் பெரியவர்வரை மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊர்க்காரர்கள்: எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்கள் அருகில் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள். அவர்கள் பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோடாதபடி, அவருடைய பெட்டியை அதின் இடத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் மரணம் அதிகமாக இருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
யெகோவாவுடைய பெட்டி பெலிஸ்தர்களின் தேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது. பின்பு பெலிஸ்தர்கள் ஆசாரியர்களையும் குறிசொல்கிறவர்களையும் அழைத்து: யெகோவாவுடைய பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாக அதனுடைய இடத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள். அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாக அனுப்பாமல், குற்றநிவாரணக் காணிக்கையை எப்படியாவது அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சுகமடைவதும் மட்டுமில்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த காரணம் என்ன என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.
அந்த மனிதர்கள் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து, யெகோவாவுடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டியின்மேல் வைத்தார்கள். அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாகப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கத்திக்கொண்டே நடந்தது; பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் பெத்ஷிமேசின் எல்லைவரை அவைகளின் பின்னாகவே போனார்கள். பெத்ஷிமேசின் மனிதர்கள் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களினால் ஏறெடுத்துப்பார்க்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள். அந்த வண்டி பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல் இருந்தது; அப்பொழுது வண்டியின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள். லேவியர்கள் யெகோவாவுடைய பெட்டியையும், அதனோடு இருந்த பொன் உருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனிதர்கள், அன்றையதினம் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளையிட்டார்கள்.
அப்படியே கீரியாத்யாரீமின் மனிதர்கள் வந்து, யெகோவாவுடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, யெகோவாவுடைய பெட்டியைக் காக்கும்படி, அவனுடைய மகனான எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாட்கள் தங்கியிருந்தது; 20 வருடங்கள் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தார்கள் எல்லோரும் யெகோவா வை நினைத்து, அழுதுகொண்டிருந்தார்கள்.
தேவனுடைய பெட்டியினாலே யெகோவா ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்திற்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான். யெகோவாவுடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு காலடி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான். தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, தன்னுடைய முழு பெலத்தோடும் யெகோவாவுக்கு முன்பாக நடனம்செய்தான். அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.
அப்பொழுது யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரத் தலைமையில் உள்ளவர்களாகிய இஸ்ரவேல் மக்களிலுள்ள பிதாக்களின் தலைவர்கள் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடம் கூடிவரச்செய்தான். இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் 7 ஆம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்தின் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடம் கூடிவந்தார்கள். இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரும் வந்திருக்கும்போது, ஆசாரியர்கள் யெகோவாவுடைய பெட்டியை எடுத்து, பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிப்பொருட்கள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியர்களும், லேவியர்களும், அவைகளைச் சுமந்தார்கள். ராஜாவாகிய சாலொமோனும் அவனோடு கூடிய இஸ்ரவேல் சபை மக்கள் அனைவரும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்கும் இல்லாத திரளான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள். அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் உள் அறையாகிய மகா பரிசுத்த ஸ்தலத்திலே கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள். கேருபீன்கள் பெட்டி இருக்கும் இடத்திலே தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது. தண்டுகளின் முனைகள் உள் அறைக்கு முன்னான பரிசுத்த இடத்திலே காணப்படும்படியாக அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்த நாள் வரைக்கும் அங்கேதான் இருக்கிறது. இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபின்பு யெகோவா அவர்களோடு உடன்படிக்கை செய்கிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர அதிலே வேறொன்றும் இருந்ததில்லை. அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போது, மேகமானது யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது. மேகத்தினால் ஆசாரியர்கள் ஊழியம் செய்வதற்கு நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது.
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களை சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து, உங்களுக்கு என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியுடனும் மேய்ப்பார்கள். நீங்கள் தேசத்தில் பெருகிப் பலுகுகிற அந்நாட்களில், அவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி யென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனி சரிசெய்யப்படுவதும் இல்லை என்று யெகோவா சொல்லுகிறார்.
அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது. எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும். இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது. அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டானது.