Arca de noé
A arca de Noé é história de salvação e fidelidade. Deus instruiu Noé a construir a arca para salvar sua família e os animais do dilúvio — exemplo supremo de obediência e fé.
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ""மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன். நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும். நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல் அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும்.
யெகோவா நோவாவை நோக்கி: "நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள். தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன. ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது.
தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது யெகோவா அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.
வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது. தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது.
40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது. பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான். பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான். பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான். அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான். பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: "நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள். உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்" என்றார்.
பின்னும் தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் நோக்கி: "நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்" என்றார்.
நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.
அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும், பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும். அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.