Esperar no Senhor
Esperar no Senhor é ato de fé e confiança. A Bíblia promete que os que esperam em Deus renovam as forças, recebem direção e experimentam a fidelidade divina no tempo certo.
Renovar as forças
Os que esperam no Senhor renovam as forças. Sobem como águias, correm e não se cansam, caminham e não se fatigam.
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி யெகோவா காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; யெகோவா நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு,
அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார்,
கர்த்தருக்கே காத்திரு.
நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே
யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன்.
யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு,
அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார்,
கர்த்தருக்கே காத்திரு.
யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,
யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர்,
யாருக்கு பயப்படுவேன்?
என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க,
என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.
எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது;
என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்;
நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்,
அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும்,
நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து,
என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்;
அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு,
யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.
யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு,
எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும். என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே,
உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது.
உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்;
நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்;
நீரே எனக்கு உதவி செய்பவர்;
என்னுடைய இரட்சிப்பின் தேவனே,
என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும்.
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்,
யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,
என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும்.
என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்;
பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும்
எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள்.
நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே
யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன்.
யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு,
அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார்,
கர்த்தருக்கே காத்திரு.
Espera paciente
Esperei com paciência no Senhor e Ele se inclinou para mim. Confie nele e descanse — Ele agirá no tempo certo.
யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவர் என்னிடமாகச் சாய்ந்து,
என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து,
என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,
என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி,
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்;
அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள்.
பெருமைக்காரர்களையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல்,
யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.
என் தேவனாகிய யெகோவாவே,
நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது;
ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது.
நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல்,
என் காதுகளைத் திறந்தீர்;
சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்;
உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்;
என்னுடைய உதடுகளை மூடமாட்டேன்,
யெகோவாவே, நீர் அதை அறிவீர்.
உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை;
உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்;
உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்;
உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது,
என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது,
அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது,
என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது.
யெகோவாவே, என்னை விடுவித்தருளும்;
யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி,
எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.
நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது;
அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால்,
நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.
யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது;
அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட
அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;
நான் நம்புகிறது அவராலே வரும்.
நீ யெகோவாவுக்குக் காத்திருந்து,
அவருடைய வழியைக் கைக்கொள்;
அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;
துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.
Confiança e perseverança
Confie no Senhor de todo o coração. Sede pacientes na tribulação — o Senhor é fiel e cumprirá todas as suas promessas.
உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,
உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,
உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம்.
சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
பெருந்துன்பத்தின்கீழ் பொறுமை
இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது.
இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே.
ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்; அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே.
மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும்,
மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது;
புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;" உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.
தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.
பத்துக் கன்னிகைகளைப் பற்றிய உவமை
அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.