கிறிஸ்துவின் சரீரம்
12 எப்படியென்றால், சரீரம் ஒன்று, அதற்கு உறுப்புகள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். 13 நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம். 14 சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது. 15 காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? 16 காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? 17 சரீரம் முழுவதும் கண்ணாக இருந்தால், கேட்கும் திறன் எங்கே? அது முழுவதும் காதாக இருந்தால், மோப்பம் செய்யும் திறன் எங்கே? 18 தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். 19 அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே? 20 உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே. 21 கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது. 22 சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது. 23 மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; 24 நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை. 25 சரீரத்திலே பிரிவினை உண்டாகாமல், உறுப்புகள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாக இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 26 ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும். 27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாகவும், தனித்தனியே உறுப்புகளாகவும் இருக்கிறீர்கள்.