கணவர்களும் மனைவிகளும்
1 அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2 போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 3 முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல், 4 அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது. 5 இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். 6 அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.