2 பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்; அவர்கள் படையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நான்காயிரம்பேர் வெட்டப்பட்டு இறந்தார்கள். 3 மக்கள் திரும்ப முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று யெகோவா பெலிஸ்தர்களுக்கு முன்பாக நம்மை முறியடித்ததென்ன? சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை4:3 யெகோவா எங்களோடு யுத்தக்களத்துக்கு வந்தால் நம்முடைய எதிரியின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவில் வரவேண்டும் என்றார்கள். 4 அப்படியே கேருபீன்களின் மத்தியில் இருக்கிற சேனைகளின் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, மக்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் இருந்தார்கள். 5 யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமிலே வருகிறபோது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பூமி அதிரத்தக்கதாக அதிக சத்தமாக ஆர்ப்பரித்தார்கள். 6 அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர்கள் கேட்டபோது: எபிரெயர்களுடைய முகாமில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு யெகோவாவின் பெட்டி முகாமில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள். 7 தேவன் முகாமில் வந்தார் என்று சொல்லப்பட்டதினால், பெலிஸ்தர்கள் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. 8 ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே. 9 பெலிஸ்தர்களே, திடன் கொண்டு ஆண்களைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்ததுபோல நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடி ஆண்களாக இருந்து யுத்தம்செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். 10 அப்பொழுது பெலிஸ்தர்கள் யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் விழுந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய அழிவு உண்டானது; இஸ்ரவேலிலே 30,000 காலாட்படையினர் மடிந்தார்கள். 11 தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் இறந்தார்கள்.
Publicidade