வெள்ளைக் குதிரையின்மேல் ஏறியிருந்தவர்
11 பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 12 அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது. 13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே. 14 பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். 15 அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார். 16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. 17 பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து: 18 நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான். 19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன். 20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். 21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.