இறுதிக்காலங்கள்
1 உன் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். எந்தவொரு தேசத்தார்களும் தோன்றினதுமுதல் அக்காலம்வரை உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புத்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் மக்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். 2 பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். 3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.