28 இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. 29 பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்ஜியத்தின் அரண்மனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: 30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் புகழ்ச்சியின் பிரஸ்தாபத்திற்கென்று, ராஜ்ஜியத்திற்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். 31 இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ஆட்சி உன்னைவிட்டு நீங்கியது. 32 மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது. 33 அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. 34 அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமான தேவனை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். 35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிமக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். 36 அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் அரசாட்சியின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிகளும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்ஜியத்திலே நான் பலப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது. 37 ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய செயல்களெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; பெருமையாக நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
Publicidade