மோசேயின் பிறப்பு
1 லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான். 2 அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள். 3 அதன்பின்பு அவள் பிள்ளையை ஒளித்துவைக்கமுடியாமல், ஒரு நாணல்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் தாரும் பூசி, அதிலே பிள்ளையை வைத்து, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள். 4 அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். 5 அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள். 6 அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, "இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று" என்றாள். 7 அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: "உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா" என்றாள். 8 அதற்குப் பார்வோனுடைய மகள்: "அழைத்துக்கொண்டுவா" என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். 9 பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: "நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்" என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். 10 பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: "அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்" என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.