விருத்தசேதனம்
1 ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள். 2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன். 4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள். 5 நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். 6 கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும்.