யாக்கோபு லாபானிடத்திற்கு ஓடிப்போகுதல்
41 யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததால் ஏசா யாக்கோபைப் பகைத்து: "என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாக வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன்" என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான். 42 மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: "உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான். 43 ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்திற்கு ஓடிப்போய், 44 உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு. 45 உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின்பு, நான் ஆள் அனுப்பி, அந்த இடத்திலிருந்து உன்னை வரவழைப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும்" என்றாள்.