பூமியில் இராட்சதர்கள்
1 மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது: 2 தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். 3 அப்பொழுது யெகோவா: "என் ஆவி 6:3 ஜீவனை கொடுக்கும் ஆவிஎன்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்" என்றார். 4 அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள். 5 மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு, 6 தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது. 7 அப்பொழுது யெகோவா: "நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது" என்றார். 8 நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது.
நோவாவின் வம்சவரலாறு
9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான்.