லாசருவின் மரணம்
1 மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான். 2 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான். 3 அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். 4 இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். 5 இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார். 6 அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார். 7 அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார். 8 அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள். 9 இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான். 10 ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார். 11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார். 12 அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். 13 இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள். 14 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி;