உலகத்தின் ஒளி
1 அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார். 2 அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். 3 இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான். 4 பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது.
இயேசு பிறவிக்குருடனைச் சுகப்படுத்துதல்
5 நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார். 6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: 7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான். 8 அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள். 9 சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். 10 அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். 11 அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான். 12 அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.