இயேசுவின் எருசலேம் பயணம்
28 இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார். 29 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: 30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். 31 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். 32 அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள். 33 கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். 34 அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, 35 அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். 36 அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள். 37 அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு, 38 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக" என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.
39 அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: "போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்" என்றார்கள். 40 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: "இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.