தேவாலயத்தில் சிறுவன் இயேசு
41 இயேசுவின் பெற்றோர் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள். 42 இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள். 43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தது. 44 இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள். 45 அவர் அங்கே இல்லாததினால் அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 46 மூன்று நாட்களுக்குப்பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்திருப்பதையும், அவர்கள் பேசுகிறதைக் கவனிப்பதையும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்பதையும் பார்த்தார்கள். 47 இயேசு பேசுவதைக்கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் அவர் போதகர்களுடைய கேள்விகளுக்கு சொன்ன பதில்களையும்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 48 இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள். 49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். 50 ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. 51 பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். 52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.