சீடர்களை ஊழியத்திற்கு அனுப்புதல்
1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார். 3 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார். 4 எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள். 5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார். 6 புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.