25 அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண், 26 அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது, 27 இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி; 28 மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள். 29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். 30 உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார். 31 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். 32 இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார். 33 தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள். 34 அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார்.