இயேசு பிசாசினால் சோதிக்கப்படுதல்
1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது. 3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: "நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்" என்றான். 4 அவர் மறுமொழியாக:
"மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை,
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" என்றார்.
5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: 6 "நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே" என்றான்.
7 அதற்கு இயேசு:
உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே" என்றார்.
8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 9 "நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்" என்று சொன்னான்; 10 அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே" என்றார். 11 அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.