பிசாசு பிடித்த இரண்டுபேர் சுகமடைதல்
28 அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது. 29 அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள். 30 அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. 31 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 32 அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின. 33 அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள். 34 அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.