2 உங்களுடைய பராமரிப்பின்கீழ் இருக்கும், இறைவனுடைய மந்தைக்கு மேய்ப்பர்களாயிருங்கள். கண்காணிப்பாளர்களாகப் பணிசெய்யுங்கள். செய்யவேண்டியிருக்கிறதே என்பதற்காக செய்யாமல், நீங்கள் அப்படி இருக்கவேண்டுமென்று இறைவன் விரும்புகிறபடியால், மனவிருப்பத்துடன் அதைச் செய்யுங்கள்; பணம் சம்பாதிக்கும் பேராசையுடன் அதைச் செய்யாமல், வாஞ்சையுடன் அந்த ஊழியத்தைச் செய்யுங்கள். 3 உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களாய் இல்லாமல், மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள். 4 அப்படி நடப்பீர்களானால், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது, ஒருபோதும் மங்கிப்போகாத மகிமையின் கிரீடத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
5 இளைஞர்களே, அந்தப்படியே நீங்களும் சபைத்தலைவர்களுக்கு அடங்கி நடங்கள். நீங்கள் எல்லோரும் மற்றவர்களுடன் பழகும்போது, மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில்,
"பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார்.
ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கிறார்."5:5 நீதி. 3:34