அன்னாளின் துதிப்பாட்டு
1 அப்பொழுது அன்னாள் இவ்வாறு சொல்லி ஜெபித்தாள்:
"யெகோவாவுக்குள் என் இருதயம் மகிழ்ச்சியடைகிறது;
யெகோவாவுக்குள் என் தலை நிமிர்ந்திருக்கிறது.
என் வாய் என் பகைவருக்கு மேலாகப் பெருமிதம் பேசுகிறது;
ஏனெனில் உமது மீட்பில் நான் மகிழ்கிறேன்.
2 "யெகோவாவைப்போல் பரிசுத்தமானவர் ஒருவரும் இல்லை;
எங்கள் இறைவனைப்போல் கற்பாறையும் இல்லை,
உம்மைவிட வேறு ஒருவரும் இல்லை.
3 "மேட்டிமையாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.
உனது வாய் அகங்காரமானதைப் பேசாதிருக்கட்டும்;
யெகோவாவே எல்லாம் அறிந்த இறைவன்;
அவர் செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
4 "வீரரின் வில்லுகள் முறிந்தன;
ஆனால் இடறி விழுந்தவர்கள் பலத்தைத் தரித்திருக்கிறார்கள்.
5 நிறைவடைந்தோர் உணவுக்காகக் கூலி வேலைசெய்கிறார்கள்;
பசியோடிருந்தவர்களோ இனி பசியோடிருக்கமாட்டார்கள்.
மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்;
ஆனால் அநேக மகன்களைப் பெற்றவளோ நலிந்துபோனாள்.
6 "சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே;
பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே.
7 வறுமையையும் செல்வத்தையும் அனுமதிக்கிறவர் யெகோவாவே;
தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே.
8 அவரே ஏழையைப் புழுதியிலிருந்து தூக்குகிறார்,
வறியவரை சாம்பலிலிருந்து உயர்த்துகிறார்.
அவர்களைப் பிரபுக்களோடு அமர்த்துகிறார்,
ஒரு மகிமையான அரியணையை
அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி செய்கிறார்.
"பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவினுடையவை;
அவற்றின் மேலே உலகத்தை அமைத்திருக்கிறார்.
9 தமது பரிசுத்தரின் பாதங்களைப் பாதுகாப்பார்;
கொடியவர் இருளில் மெளனமாவார்கள்.
"பெலத்தினால் ஒருவனும் வெற்றிகொள்வதில்லை;
10 யெகோவாவை எதிர்ப்பவர்கள் நொறுக்கப்படுவார்கள்.
அவர் வானத்திலிருந்து அவர்களுக்கெதிராய் முழங்குவார்;
யெகோவா பூமியின் கடையாந்தரங்கள்வரை நியாயந்தீர்ப்பார்.
"தனது அரசனுக்கு வல்லமையைக் கொடுப்பார்;
தாம் அபிஷேகித்தவரின் தலையை உயர்த்துவார்."