புதிய எருசலேம்
1 பின்பு நான், "ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியையும் கண்டேன்"21:1 ஏசா. 65:17 ஏனெனில், முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இருக்கவில்லை. 2 அப்பொழுது நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைக் கண்டேன். அது இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்தது; அது தனது கணவனுக்காக அழகாய் அலங்கரிக்கப்பட்ட, ஒரு மணமகளைப்போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3 அப்பொழுது நான், அரியணையில் இருந்து வருகின்ற, ஒரு பெரும் குரல் இவ்வாறு சொல்வதைக் கேட்டேன்: "இறைவன் தங்குகின்ற இடம், இப்பொழுது மனிதருடன் இருக்கின்றது. அவர் மனிதருடனேயே குடியிருப்பார். அவர்கள் அவருடைய மக்களாயிருப்பார்கள். இறைவன் தாமே அவர்களுடன் இருந்து, அவர்களுடைய இறைவனாயிருப்பார். 4 ‘அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் அவர் துடைப்பார். இனிமேல் மரணம் இருக்காது’21:4 ஏசா. 25:8 புலம்பலோ, அழுகையோ, வேதனையோ இருக்காது. ஏனெனில், பழைய முறைமைகள் எல்லாம் இல்லாமற்போயிற்று" என்றது.