முடிவுகாலம்
1 "அக்காலத்தில் உன் மக்களைப் பாதுகாக்கிற பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாயேல் எழும்புவான். எந்தவொரு நாடுகளும் தோன்றியதிலிருந்து அதுவரை ஒருபோதும் நிகழ்ந்திராத துன்பகாலம் ஒன்று வரும். ஆனால் அந்தக் காலத்திலே புத்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டவர்களாகக் காணப்படுகிற உனது மக்கள் விடுவிக்கப்படுவார்கள். 2 பூமியில் புழுதியில் புதைக்கப்பட்டிருக்கிற மக்கள் கூட்டங்கள் எழுந்திருப்பார்கள். சிலர் நித்திய வாழ்வுக்கும், மற்றவர்கள் நித்திய வெட்கத்திற்கும், இழிவுக்கும் எழுந்திருப்பார்கள். 3 ஞானமுள்ளவர்கள் வானங்களின் பிரகாசத்தைப்போலவும், பலரை நேர்மைக்கு வழிநடத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றும் பிரகாசிப்பார்கள்.