5 ஒரு தந்தை தனது மகனைக் கூப்பிடுவதைப்போல, உங்களைக் கூப்பிட்டு உற்சாகப்படுத்தும் வார்த்தையை நீங்கள் முழுமையாக மறந்துவிட்டீர்களா? அவர்:
"என் மகனே, கர்த்தர் உன்னைத் தண்டித்துத் திருத்தும்போது,
அதை அலட்சியப்படுத்தாதே;
அவர் உன்னைக் கண்டிக்கும்போது, மனந்தளர்ந்து போகாதே.
6 ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களையே தண்டித்துத் திருத்துகிறார்.
தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்."12:6 நீதி. 3:11,12 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
7 கஷ்டங்கள் வரும்போது அவை உங்களைத் திருத்துவதற்காகவே வருகின்றன என்று அறிந்து, சகித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவன் உங்களைத் தமது பிள்ளைகளாக நடத்துகிறார். தனது தந்தையினால் தண்டித்துத் திருத்தப்படாத மகன் எங்கே இருக்கிறான்? 8 பிள்ளைகள் தண்டித்துத் திருத்தப்படுகிறார்கள். எனவே நீங்கள் அவ்விதம் தண்டித்துத் திருத்தப்படாவிட்டால், அவருடைய உண்மையான பிள்ளைகளாயிராமல், முறைகேடாய் பிறந்த பிள்ளைகளாய் இருப்பீர்கள். 9 மேலும், நம்மைத் தண்டித்துத் திருத்திய சரீரத்தின் தந்தைமார்கள் நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மதித்து நடந்தோம். அப்படியானால் நம் ஆவிகளுக்குத் தந்தையாய் இருக்கிறவருக்கு நாம் பணிந்து நடந்து வாழ்வைப் பெறுவது எவ்வளவு அவசியம்?