24 "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். 25 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள்.