இயேசு முதல் சீடனை அழைத்தல்
1 ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே5:1 அதாவது, கலிலேயாக் கடல் நின்றுகொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் கூடிவந்தார்கள். 2 அவர் கரையோரம் இரண்டு படகுகளைக் கண்டார், மீனவர் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். 3 அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து கொஞ்சம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டுக்கொண்டு, படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதனை செய்தார்.
4 அவர் பேசி முடித்தபின்பு, சீமோனை நோக்கி, "படகை ஆழமான தண்ணீர் பகுதிக்குக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார்.
5 அதற்குச் சீமோன், "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே நான் வலைகளைப் போடுகிறேன்" என்றான்.
6 அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின. 7 அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின.
8 சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, "ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவியான மனிதன்!" என்றான். 9 அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள். 10 சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள்.
அப்பொழுது இயேசு சீமோனிடம், "பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்" என்றார். 11 எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.