6 " ‘பாலுறவுகொள்ளும்படி யாரும் நெருங்கிய உறவினரை அணுகக்கூடாது. நானே யெகோவா.
7 " ‘நீ உன் தாயுடன் பாலுறவுகொண்டு, உன் தகப்பனை கனவீனப்படுத்தாதே. அவள் உன் தாய். அவளுடன் பாலுறவு கொள்ளாதே.
8 " ‘நீ உன் தகப்பனின் மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் தகப்பனைக் கனவீனப்படுத்தும்.
9 " ‘நீ உன் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. உன் தகப்பனின் மகளோடு அல்லது உன் தாயின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அவள் உன் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பிறந்திருந்தாலும் சரி, அவளுடன் பாலுறவு கொள்ளாதே.
10 " ‘உன் மகனுடைய மகளோடு, உன் மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அதுவும் உன்னைக் கனவீனப்படுத்தும்.
11 " ‘உன் தகப்பனுக்குப் பிறந்த, உன் தகப்பனின் மனைவியின் மகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவளும் உனக்குச் சகோதரிதான்.
12 " ‘உன் தகப்பனுடைய சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் தகப்பனுடைய நெருங்கிய உறவினள்.
13 " ‘உன் தாயின் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே; ஏனெனில் அவள் உன் தாயினுடைய நெருங்கிய உறவினள்.
14 " ‘உன் தகப்பனுடைய சகோதரனின் மனைவியுடன் பாலுறவு கொள்வதற்காக, அவளை நெருங்குவதினால் அவனைக் கனவீனப்படுத்தாதே. அவள் உன்னுடைய சிறியதாய்.
15 " ‘உன் மருமகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் மகனின் மனைவி; அவளுடனும் பாலுறவு கொள்ளாதே.
16 " ‘உன் சகோதரனுடைய மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் சகோதரனைக் கனவீனப்படுத்தும்.
17 " ‘தாயும் மகளுமான இருவருடனும் பாலுறவு கொள்ளாதே. அவளுடைய மகனின் மகளோடு, மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. இவர்களும் அவளுக்கு நெருங்கிய உறவுள்ளவர்கள். இது ஒரு கொடுமையான செயல்.
18 " ‘உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்குப் போட்டியாக, அவள் சகோதரியை உனக்கு மனைவியாக்கி அவளுடன் பாலுறவு கொள்ளலாகாது.
19 " ‘ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் அசுத்தமாய் இருக்கும்போது, பாலுறவுகொள்ளும்படி அவளை நெருங்காதே.
20 " ‘உங்கள் அயலானின் மனைவியுடன் பாலுறவுகொண்டு அவளால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம்.
21 " ‘நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஒருவரையும், மோளேக்கு தெய்வத்திற்குப் பலியிடப்படுவதற்காகக் கொடுத்து, உங்கள் இறைவனுடைய பெயரை இழிவுபடுத்த வேண்டாம். நானே யெகோவா.
22 " ‘நீங்கள் ஒரு பெண்ணோடு பாலுறவு கொள்வதுபோல், ஆணோடு பாலுறவுகொள்ள வேண்டாம். அது அருவருப்பானது.
23 " ‘எந்தவொரு மிருகத்தோடும் நீங்கள் பாலுறவுகொண்டு அதினாலே உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் மிருகத்தோடு பாலுறவுகொள்ளும்படி, தன்னை ஒப்புவிக்கக் கூடாது. அது இயல்பிற்கு முரணான பாலுறவாகும்.