இறந்த மகளும் வியாதியான பெண்ணும்
18 இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு, அவரிடம், "எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் உயிர் பெறுவாள்" என்று சொன்னான். 19 இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள்.
20 அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். 21 அவள், "நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்" எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
22 இயேசு அவளை திரும்பிப்பார்த்து, "மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது" என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள்.
23 பிறகு இயேசு ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்குள் போனவுடன் குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார். 24 இயேசு அவர்களிடம், "வெளியே போங்கள். இந்த சிறுமி சாகவில்லை, அவள் தூங்குகிறாள்" என்றார். அவர்களோ அதைக்கேட்டு நகைத்தார்கள். 25 மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின், இயேசு உள்ளேப் போய், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள். 26 இச்செய்தி, அப்பகுதிகள் எங்கும் பரவியது.