ஞானத்தினால் வரும் நன்மைகள்
1 என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து,
புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி,
2 நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு,
என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை.
3 உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து,
புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி,
4 சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி,
புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால்,
5 அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்;
இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய்.
6 ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்;
அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன.