ஆவியானவரின் வழியாக வாழ்வு
1 ஆகவே, இப்பொழுது கிறிஸ்து இயேசுவில் இருக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லவேயில்லை. 2 ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக, வாழ்வைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டமானது, பாவ சட்டத்திலிருந்தும் மரண சட்டத்திலிருந்தும் என்னை விடுதலையாக்கிற்று. 3 மோசேயின் சட்டம் நமது மாம்ச இயல்பின் காரணமாக பலவீனமடைந்ததினால், எந்த வேலையைச் செய்துமுடிக்க வல்லமையற்றுப் போயிற்றோ, அதை இறைவனே செய்து முடித்தார். எப்படியென்றால் பாவநிவாரண பலியாக இறைவன் தனது சொந்த மகனை ஒரு பாவ மனிதனின் சாயலில் அனுப்பி, பாவம் உள்ள மனிதனிலிருந்த பாவத்தின் ஆற்றலை இல்லாதொழித்தார். 4 மாம்ச இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழிநடத்துதலில் வாழும் நம்மில், மோசேயின் சட்டத்தின் நியாயமான கட்டளைகளை நிறைவேற்றும்படியே இப்படிச் செய்தார்.