10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: 11 சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள். 12 அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து, 14 அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். 15 அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன். 16 உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள். 17 அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.
சாமுவேலின் பிறப்பும் பொருத்தனையும்
19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, யெகோவாவைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; யெகோவா அவளை நினைத்தார். 20 சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல்1:20 தேவன் பதில் அளித்தார், என்று பெயரிட்டாள்.