ஏலியின் துன்மார்க்க மகன்கள்
12 ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை அறியவில்லை. 13 அந்த ஆசாரியர்கள் மக்களை நடத்தினவிதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்தும் காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று முனை கூருள்ள ஒரு ஆயுதத்தைத் தன்னுடைய கையிலே பிடித்துவந்து, 14 அதினாலே, உலோகத்தட்டிலோ, பானையிலோ, மரத்தொட்டியிலோ, சட்டியிலோ குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதை ஆசாரியன் எடுத்துக்கொள்வான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலர்களுக்கு எல்லாம் செய்தார்கள். 15 கொழுப்பைத் தகனம் செய்வதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனிதனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், வேக வைத்ததை உன்னுடைய கையிலே வாங்கமாட்டேன் என்பான். 16 அதற்கு அந்த மனிதன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனம் செய்யட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன் என்பான். 17 ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் யெகோவாவுக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் யெகோவாவுடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள்.