20 பின்பு தேவன்: "நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்" என்றார். 21 தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, "நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்" என்றும் சொன்னார். 23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது. 24 பின்பு தேவன்: "பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்" என்றார்; அது அப்படியே ஆனது.
Publicidade