இயேசு சீடர்களை ஊழியத்திற்கு அழைத்தல்
1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலின் அருகே நின்றபோது, மக்கள்கூட்டம் தேவவசனத்தைக் கேட்பதற்காக அவரிடம் நெருங்கிவந்தார்கள். 2 அப்பொழுது கடற்கரையிலே நின்றுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார். 4 அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார். 5 அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான். 6 அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள். 7 அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள். 8 சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். 9 அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான். 10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார். 11 அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.