மரித்த சிறுபெண்ணும், வியாதியுள்ள பெண்ணும்
18 அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். 19 இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார். 20 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்: 21 நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். 22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள். 23 இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு: 24 விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். 25 மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். 26 இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.