சர்தையிலுள்ள திருச்சபைக்கு
1 "சர்தை பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
இறைவனுடைய ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் பிடித்துக் கொண்டிருக்கிறவருடைய வார்த்தைகள் இவையே.
உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன்; நீ உயிருடன் இருக்கிறாய் என்று பெயர் பெற்றிருக்கிறாய், ஆனால் நீ இறந்துவிட்டாய். 2 விழித்தெழு! சாகும் தருவாயில், மீதியாயிருக்கிறவைகளைப் பெலப்படுத்து. ஏனெனில், என்னுடைய இறைவனின் பார்வையில், உன்னுடைய செயல்களை நான் நிறைவுள்ளதாய் காணவில்லை.