Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 25

யெகோவாவுக்குத் துதி

1 யெகோவாவே, நீரே என் இறைவன்;

நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன்.

அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்;

நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி,

பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர்.

2 நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்;

அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர்.

அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது;

அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை.

3 ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்;

இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும்.

4 நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்;

வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர்.

புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும்,

வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர்.

முரடர்களின் மூச்சு,

ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது.

5 அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது.

அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்;

மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல,

இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது.

6 சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும்

சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார்.

நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும்,

சிறந்த இறைச்சிகளும்,

உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும்.

7 இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும்

மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்;

இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும்.

8 மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார்.

ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள

கண்ணீரைத் துடைத்துவிடுவார்.

அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின்

அவமானத்தை நீக்கிவிடுவார்.

யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார்.

9 அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள்,

"நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம்,

இவர் எங்களை மீட்டார்.

இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்;

இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்" என்பார்கள்.

10 யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்;

வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல்,

மோவாபியர் அவரின்கீழ் மிதிக்கப்படுவார்கள்.

11 நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல்,

மோவாபியர் தங்கள் கைகளை விரிப்பார்கள்;

அவர்களுடைய கைகளில் திறமை இருந்தபோதிலும்,

இறைவன் அவர்களுடைய பெருமையைச் சிறுமைப்படுத்துவார்.

12 மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை

அவர் கீழே தள்ளி விழ்த்துவார்.

அவைகளை அவர் நிலத்தின் புழுதியில் கீழே

தள்ளிப் போடுவார்.

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.