Publicidade

Isaías 46

பாபிலோனின் தெய்வங்கள்

1 பேல் தெய்வம் தலை கவிழ்கிறது;

நேபோ தெய்வம் குப்புற விழுகிறது.

அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன;

ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள்

இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன.

2 அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன.

அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி

தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன.

3 "யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே,

நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்;

நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன்,

நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன்.

4 நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும்,

உங்களைத் தாங்கப்போகிறவர் நானே.

உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன்.

நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன்.

5 "என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்?

என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்?

6 சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி,

தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்;

அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்;

பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள்.

7 அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள்.

அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள்.

அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது.

ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை;

ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது.

8 "கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள்.

இதை மனதில் பதித்து வையுங்கள்.

9 முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்;

நானே இறைவன், வேறொருவர் இல்லை;

நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை.

10 நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர்,

முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர்.

‘என் நோக்கம் நிலைநிற்கும்;

நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன்.

11 நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன்.

தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன்.

நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்;

நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன்.

12 பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே!

எனக்குச் செவிகொடுங்கள்.

13 நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன்,

அது வெகுதூரத்தில் இல்லை;

எனது இரட்சிப்பு தாமதம் அடையாது.

நான் சீயோனுக்கு இரட்சிப்பையும்,

இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-