Publicidade

Isaías 55

தாகமுள்ளோருக்கு அழைப்பு

1 "ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும்

நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;

பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்,

வாங்கி உட்கொள்ளுங்கள்.

வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி

திராட்சரசமும் பாலும் வாங்குங்கள்.

2 உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்?

திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்?

கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள்.

அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும்.

3 காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்;

உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள்.

நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்;

நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன்.

4 இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும்,

மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன்.

5 ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய்,

உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள்.

ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும்

இறைவனுமான உங்கள் யெகோவா

உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்."

6 அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்;

அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள்.

7 கொடியவன் தன் வழிகளையும்,

தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்;

அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார்,

எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார்.

8 "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல;

உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல"

என்று யெகோவா சொல்லுகிறார்.

9 "பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே,

என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன.

என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை.

10 மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன;

அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி,

அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல்

அவை திரும்பிச் செல்வதில்லை.

எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும்,

உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன.

11 என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது:

நான் விரும்பியவற்றைச் செய்து,

நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல்

அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது.

12 நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி

சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்;

மலைகளும் குன்றுகளும்

உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்;

வெளியின் மரங்கள் யாவும்

கைகொட்டும்.

13 முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும்,

காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும்.

இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும்,

அழியாத நித்திய

அடையாளமாகவும் இருக்கும்."

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-