Publicidade

Isaías 35

மீட்கப்பட்டோரின் மகிழ்ச்சி

1 பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும்.

வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும்.

அது லீலி பூப்பதுபோல் பூக்கும். 2 அது வளமாய் வளர்ந்து

மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும்.

லெபனோனின் மகிமையும்,

கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும்.

யெகோவாவின் மகிமையையும்,

நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள்.

3 தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள்,

தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள்.

4 இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு,

"திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்;

இதோ, உங்கள் இறைவன்

உங்கள் பகைவரை பழிதீர்க்கவும்,

பதிலளிக்கவும் வருவார்,

அவர் வந்து உங்களை விடுவிப்பார்" என்று சொல்லுங்கள்.

5 அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும்,

செவிடரின் காதுகளும் திறக்கப்படும்.

6 முடவன் மானைப்போல் துள்ளுவான்,

ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்;

வனாந்திரத்திலிருந்து தண்ணீரும்,

பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும்.

7 சுடுமணல் நீர்த் தடாகமாகும்,

வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும்.

நரிகள் தங்கும் இடங்களில்

புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும்.

8 அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும்,

அது பரிசுத்த வழி எனப்படும்.

அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள்.

இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும்.

கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள்.

9 அங்கு சிங்கம் இருப்பதில்லை;

எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை,

அங்கே காணப்படுவதுமில்லை.

மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

10 யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள்.

அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்;

நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும்.

மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைவார்கள்,

துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-