திராட்சைக்கொடியும் கிளைகளும்
1 "நானே உண்மையான திராட்சைக்கொடி. என் பிதாவே தோட்டக்காரர். 2 கனிகொடாத என்னிலுள்ள ஒவ்வொரு கிளையையும் அவர் தூக்கிவைக்கிறார். ஆனால், கனி கொடுக்கிற கிளைகளையோ அவர் கத்தரித்துச் சுத்தம் பண்ணுகிறார். அதனால் அவை இன்னும் அதிகமாய்க் கனிகொடுக்கும். 3 நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் ஏற்கெனவே சுத்திகரிக்கப் பட்டிருக்கிறீர்கள். 4 என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தன் சுயமாகவே கனி கொடுப்பதில்லை; அது திராட்சைக் கொடியிலே நிலைத்திருக்க வேண்டும். நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் உங்களால் கனிகொடுக்க இயலாது.
5 "நானே திராட்சைக்கொடி; நீங்களோ கிளைகள். நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் அதிகமாய் கனி கொடுப்பீர்கள்; என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவுமே செய்யமுடியாது. 6 நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால், நீங்கள் வெட்டி எறியப்பட்டு வாடிப்போகிற ஒரு கிளையைப்போல் இருப்பீர்கள்; அப்படிப்பட்ட கிளைகள் சேர்த்து எடுக்கப்பட்டு நெருப்பில்போட்டு எரிக்கப்படும். 7 நீங்கள் என்னில் நிலைத்திருந்து என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்குமானால், நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அது உங்களுக்குச் செய்யப்படும். 8 நீங்கள் அதிகமாய் கனிகொடுத்து, என்னுடைய சீடர்கள் எனக் காண்பியுங்கள். இதுவே என் பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும்.