3 ஏரோது அரசன் இதைக் கேட்டபோது, அவனும் அவனோடுகூட எருசலேம் மக்கள் எல்லோரும் கலக்கமடைந்தார்கள். 4 அப்பொழுது அவன் எல்லா தலைமை ஆசாரியர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி, "கிறிஸ்து எங்கே பிறப்பார்?" எனக் கேட்டான். 5 அவர்களோ, "யூதேயாவிலுள்ள பெத்லகேமில்" என்றார்கள், "ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே:
6 " ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே,
யூதாவை ஆளுபவர்களில் நீ அற்பமானவனல்ல;
ஏனெனில், உன்னிலிருந்து ஆளுநர் ஒருவர் வருவார்.
அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார்,’2:6 மீகா 5:2,4"
என பதிலளித்தார்கள்.
7 அதற்குப் பின்பு ஏரோது அறிஞர்களை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை குறித்து அவர்களிடம் கவனமாய்க் கேட்டு அறிந்துகொண்டான். 8 ஏரோது அவர்களிடம், "நீங்கள் போய் கவனமாய் விசாரித்து குழந்தையைத் தேடுங்கள். அவரைக் கண்டதும், நானும் போய் அவரை வழிபடும்படி, உடனே எனக்கும் அறிவியுங்கள்" என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.