1 நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள்,
அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள்.
2 மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை,
ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
3 கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும்,
வெட்கத்துடன் அவமானமும் வரும்.
4 வாயின் வார்த்தைகள் ஆழமான கடல்,
ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை.
5 கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும்,
குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல.
6 மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும்,
அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும்.
7 மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு;
அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி.
8 புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை;
அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
9 தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன்
அழிப்பவனுக்குச் சகோதரன்.
10 யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்;
நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.
11 பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்;
அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள்.
12 வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது,
ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
13 கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது,
முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.
14 மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்;
மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்?