4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?
நீ அறிவாளியானால் அதைச் சொல்.
5 அதற்கு அளவு குறித்தவர் யார்?
அதின்மேல் நூல்போட்டவர் யார்?
இதை நீ அறிந்திருந்தால் சொல்.
6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?
அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி,
தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.
8 கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது,
அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
9 மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
10 நான் அதற்கு எல்லையைக் குறித்து,
அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:
11 இதுவரை வா, மீறி வராதே;
உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?