Publicidade

Provérbios 10

சாலொமோனின் நீதிமொழிகள்

1 சாலொமோனின் நீதிமொழிகள்:

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;

மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.

2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;

நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;

துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;

சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;

அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.

6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;

கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;

துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.

8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;

அலப்புகிற மூடனோ விழுவான்.

9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;

கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;

அலப்புகிற மூடன் விழுவான்.

11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;

கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

12 பகை விரோதங்களை எழுப்பும்;

அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.

13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;

மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;

மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;

ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.

16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,

துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;

திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;

புறங்கூறுகிறவன் மதிகேடன்.

19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;

தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;

துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;

மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.

22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;

அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.

23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;

புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;

நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;

நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;

26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,

அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;

துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.

28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;

துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.

29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,

அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.

30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;

துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.

31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;

மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.

32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;

துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-