Publicidade

Provérbios 13

ஞானியின் நடவடிக்கை

1 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்;

பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.

2 மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்;

துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.

3 தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்;

தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது;

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;

5 நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்;

துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.

6 நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்;

துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.

7 ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு;

மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.

8 மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்;

தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.

9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்;

துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.

10 அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்;

ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்;

கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

12 நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்;

விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.

13 திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்;

கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.

14 ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று;

அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

15 நற்புத்தி தயவை உண்டாக்கும்;

துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.

16 விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்;

மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

17 துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்;

உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.

18 புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்;

கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.

19 வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது;

தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.

20 ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்;

மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.

21 பாவிகளைத் தீவினை தொடரும்;

நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

22 நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்;

பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

23 ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்;

நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

24 பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்;

அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

25 நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்;

துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-