Publicidade

Provérbios 12

ஞானியின் செயல்கள்

1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்;

கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

2 நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்;

கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.

3 துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்;

நீதிமான்களுடைய வேரோ அசையாது.

4 குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்;

அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.

5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்;

துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.

6 துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது;

உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.

7 துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;

நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.

8 தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்;

மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

9 உணவில்லாதவனாக இருந்தும்,

தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட,

மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

10 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்;

துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.

11 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்;

வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்;

நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி;

நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.

14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்;

அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.

15 மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்;

ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;

அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.

17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்;

பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு;

ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.

19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்;

பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;

20 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது;

சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.

21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது;

துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;

உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்;

மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.

24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்;

சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.

25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;

நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்;

துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.

27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை;

ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;

அந்தப் பாதையில் மரணம் இல்லை.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-