1 ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார்.
2 இருளில் நடக்கும் மக்கள்
ஒரு பேரொளியைக் கண்டார்கள்;
மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல்
வெளிச்சம் பிரகாசித்தது.
3 நீர் நாட்டைப் பெருகச்செய்து
அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர்.
அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல,
அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள்.
கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல,
அவர்கள் மகிழ்கிறார்கள்.
4 மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல,
நீர் அவர்களுக்குப் பாரமாயிருந்த
நுகத்தை உடைத்துப்போட்டீர்.
அவர்களுடைய தோள்களின் அழுத்திய பாரத்தையும்,
அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலையும் அகற்றிப்போட்டீர்.
5 ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும்,
இரத்தத்தில் தோய்ந்த உடைகள் அனைத்தும்
நெருப்புக்கு இரையாக
சுட்டெரிக்கப்படும்.
6 ஏனெனில், "நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார்,
நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்,
அரசாட்சி அவர் தோளின்மேல் இருக்கும்.
அவர் அதிசயமான ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன்,
நித்திய தகப்பன், சமாதானப்பிரபு"
என அழைக்கப்படுவார்.